

சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பொட்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மனைவி ரேவதி (வயது 38). மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் வாசலில் தெளிப்பதற்காக சாணம் எடுக்க அவரது உறவினர் வீட்டின் அருகே நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 பேர் ஓமலூர் செல்வதற்கு வழி கேட்டுள்ளனர். அவர்களிடம் ரேவதி வழி சொல்லிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், ரேவதியின் கழுத்தில் அணிந்திருந்த 3.75 பவுன் தாலியைப் பறித்தார். பின்னர் அந்த 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரேவதி, சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதிகாலையில் பெண்ணிடம் தாலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.