சேலம்-ஓமலூர் இடையே அகலரெயில் பாதையில் இறுதிக்கட்ட சோதனை ஓட்டம்

சேலம்-ஓமலூர் இடையே அகலரெயில் பாதையில் இறுதிக்கட்ட சோதனை ஓட்டம்
Published on

சூரமங்கலம்:-

சேலம்-ஓமலூர் இடையே புதிதாக அமைக்கப்பட்ட அகல ரெயில் பாதையில் 120 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேக ரெயிலை இயக்கி இறுதிக்கட்ட சோதனை ஓட்டம் நடந்தது.

அகல ரெயில் பாதை

சேலம்-மேட்டூர் இருவழி அகல ரெயில்பாதை திட்டம் தொடங்கப்பட்டு அந்த பணி நிறைவடைந்தது. முதலில் மேட்டூர் அணை-மேச்சேரி வரையும், அதன்பிறகு மேச்சேரி-ஓமலூர் இடையேயும் இரண்டாவது வழித்தடம் அமைக்கப்பட்டது.

இதையடுத்து சேலம்-ஓமலூர் இடையே உள்ள 12.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழி ரெயில்பாதையாக இது மாறி உள்ளது. இந்த பாதையில் தெற்கு ரெயில்வேயின் பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் கடந்த மாதம் அதிவேக ரெயில் சோதனை ஓட்டத்தை நடத்தினார்.

இந்நிலையில், இந்த பாதையின் கட்டுமான உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய தெற்கு ரெயில்வேயின் தலைமை நிர்வாக அதிகாரி (கட்டுமானம்) வி.கே.குப்தா நேற்று காலை சேலம் வந்தார். பின்னர் சேலத்தில் இருந்து ஓமலூர் வரை ரெயில்வே பாதையில் டிராலியில் சென்று ஆய்வு நடத்தினர்.

இறுதிக்கட்ட சோதனை ஓட்டம்

இந்த ஆய்வின் போது தண்டவாள கட்டுமானம் உறுதித்தன்மை மற்றும் சிக்னல் கட்டுமானம் ஆகியவற்றை பார்வையிட்டனர். இதையடுத்து மாலையில் ஓமலூர் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வரை தலைமை நிர்வாக அதிகாரி (கட்டுமானம்) வி.கே.குப்தா மேற்பார்வையில் அதிவேகமாக ரெயிலை இயக்கி இறுதிக்கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

ஓமலூர் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5.22 மணிக்கு புறப்பட்டு சேலம் ரெயில் நிலையத்திற்கு மாலை 5.34 மணிக்கு வந்தடைந்தது. அதிவேக ரெயில் சோதனை ஓட்டத்தின் போது ரெயில் அதிக பட்சமாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை நடத்தினர். ஓமலூர் முதல் சேலம் வரை உள்ள 12.3 கிலோ மீட்டர் தூரத்தை 12 நிமிடத்தில் வந்தடைந்தது, இந்த சோதனையின் போது சேலம் ரெயில்வே கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் பூபதி ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். இதையடுத்து புதிய ரெயில்பாதையில் சேலம்-யஷ்வந்த்பூர் ரெயில் நேற்று இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com