பைக்கில் சென்ற போலீஸ்காரர், லாரி சக்கரத்தில் சிக்கி பலி

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
தினேஷ்
Published on: 

சேலம்,

சேலம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்த போலீஸ்காரர், கார் மோதியதில் நிலைதடுமாறி லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்பாபிஷேக பாதுகாப்புப் பணி

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள வாழதாசம்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் தினேஷ் (38). இவர் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்தார். மேலும், இன்ஸ்பெக்டர் தேவியின் ஜீப் டிரைவராகவும் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற பாதுகாப்புப் பணியில் தினேஷ் ஈடுபட்டார். காலையில் கும்பாபிஷேகம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர் தனது பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கந்தம்பட்டி மேம்பாலத்தில் தினேஷ் சென்றுகொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றார். அந்த நேரத்தில் பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக தினேஷின் பைக்கில் லேசாக மோதியது.

இதனால் நிலைதடுமாறிய தினேஷ், லாரியின் சக்கரத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார், தினேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரர் தினேஷுக்கு சரண்யா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். அவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com