

சென்னை,
அமமுக பொதுச்செய்லாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சேலம் அருகே மதுபோதையால் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் குத்திக் கொலை - கொலைக்கு அடிப்படைக் காரணமான போதைப் பொருட்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியில் இரவுநேரத்தில் மது போதையிலிருந்த மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அடித்துக் கொலை செய்து அதனை வீடியோவாக எடுத்து மகிழ்ந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கடந்த ஐந்தாண்டுக் கால திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கிறோம் என்ற பெயரில் 1.0, 2.0 என பெயர் வைத்தார்களே தவிர, அதனைக் கட்டுப்படுத்த எந்தவித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காததால், தமிழ்நாட்டின் தலைநகரத்தில் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை சர்வ சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் தாராளமயமாகி, அதனால் ஏற்படும் குற்றச்சம்பவங்களும் பன்மடங்கு பெருகின.
எனவே, தற்போது தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசு, இந்த கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கப் பிரத்தியேக தடுப்புப் படையை அமைத்துள்ள நிலையில், காலம் தாழ்த்தாமல் அப்படையின் பணிகளை விரைவுபடுத்தி போதைப்பொருட்களின் நடமாட்டத்தை ஒழித்து மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.