

சேலம்,
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு சேர்வராயன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று திடீரென பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள், சிறு செடிகளில் தீ மளமள வென பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். வனப்பகுதி கரடுமுரடான பாதையாக இருந்ததால் அவர்கள் தீயை அணைக்க சிரமத்திற்குள் ளாகினர்.
இருப்பினும், தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர் இணைந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் அரிய வகை மூலிகை தாவரங்கள், மரங்கள், சிறு செடிகள் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.