சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது
x

திருவிழா நாட்களில் தினமும் காலையில் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருச்சி

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை தேரோட்டம், பூச்சொரிதல் விழா, தைப்பூச திருவிழா ஆகியவை மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, காலையில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மாரியம்மன் படம் வரையப்பட்ட துணியாலான கொடியை தங்க கொடிமரத்தில் கோவில் குருக்கள் காலை 7.40 மணிக்கு ஏற்றினர்.

அதைத்தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கோவில் இணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதையடுத்து, இரவில் அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கிலும், இரவில் பூத வாகனம், மரஅன்ன வாகனம், மர ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களிலும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மேலும் ஜனவரி 31ம் தேதி தெப்ப திருவிழாவும், பிப்ரவரி 1ம் தேதி திருக்கோயிலிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பாடும், தொடர்ந்து இரவு வடதிருக்காவேரி கரையில் அரங்கநாதரிடமிருந்து சீர்பெறும் நிகழ்வும் நடைபெறும். பிப்ரவரி 2ம் தேதி அம்மன் மஹா அபிஷேகத்துடன் வழி நடை உபயங்களை கண்டருள்கிறார்.

1 More update

Next Story