

வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வலங்கைமான் வட்டாரத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சுமார் 14,635 எக்டேர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் அளவுக்கு அதிகமான உரங்களை பயிருக்கு விடுவதால் பயிர்கள் எளிதில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து விவசாயிகளும் தங்கள் வயல்களில் மண் பரிசோதனை செய்து அதற்கு ஏற்றாற் போல் உரங்களை இடவேண்டும். கதிர் உருவாகும் பருவம், கதிர் வெளிவரும் பருவம் ஆகிய பருவங்களில் தலா 30 கிலோ தழைச்சத்தும், 10 கிலோ சாம்பல் சத்தும், இடவேண்டும். இவ்வாறு உரத்தினை பிரித்து அளிப்பதனால் சாகுபடி செலவு குறைவதோடு சத்துக்கள் பயிர்களுக்கு முழுவதுமாக சென்றடைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.