சமூகநீதி விடுதிகள்: பெயரை மட்டும் மாற்றுவதால் என்ன பயன்? - ராமதாஸ் கேள்வி

“சமூகநீதி விடுதிகள்” என்று பெயரை மட்டும் மாற்றுவதால் என்ன பயன் விளையப் போகிறது என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூகநீதி விடுதிகள்: பெயரை மட்டும் மாற்றுவதால் என்ன பயன்? - ராமதாஸ் கேள்வி
Published on

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி 'சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் பெயர் மாற்றத்தோடு நின்றுவிட்டால் பலனில்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கான விடுதிகள் இனி, "சமூகநீதி விடுதிகள்" என்று பெயர் மாற்றப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது ஒரு வகையில் வரவேற்கத்தக்கது என்றாலும், பெயரை மட்டும் மாற்றுவதால் என்ன பயன் விளையப் போகிறது என்ற கேள்வியும் எழுகிறது?

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவற்றின் கீழ் மொத்தம் 2,739 விடுதிகள் இனி "சமூகநீதி விடுதிகள்" என அழைக்கப்படும் என அறிவித்துள்ள முதல்-அமைச்சர், "சமூக ஏற்றத்தாழ்வுகளை உடைத்து, சமநீதியை வளர்ப்பதற்காக பள்ளி கல்லூரிகளின் அரசு விடுதிகளின் பெயர் சமூகநீதி விடுதிகள் என மாற்றப்படும்" என்று அறிவித்திருக்கிறார். பெயர்களை மட்டும் மாற்றுவதால் பெரிய மாற்றம் ஏதும் நடந்துவிடாது. நீதியரசர் சந்துரு அளித்த அறிக்கையில் பள்ளி, கல்லூரிகளில் சாதிப் பெயர்கள் இருக்கக் கூடாது என்ற பரிந்துரையை ஏற்று இந்த அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.

இதை விட முக்கியமானது, தற்போது பள்ளி, கல்லூரி வளாகங்களில் மிக ஆபத்தான சம்பவங்கள் அவ்வப்போது செய்திகளாக வெளியாகி வருகின்றன. மாணவர்களிடையே மதுப்பழக்கம், போதைப் பழக்கம் அதிகரித்து வருகின்றன. அவற்றை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் சமூக நீதியின் ஓர் அடையாளம் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

சமூகத்தில் மாணவ, மாணவிகள் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறும் நோக்கில் படிப்பில் கவனம் செலுத்த போதிய அவகாசம் கிடைப்பதற்காக தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன. அங்கே மாணவர்கள் கல்வி கற்பதற்கு உரிய வழிவகைகளை அமைத்து அவர்களை முன்னேற்றலாம். இதுபோன்றவற்றில் அரசு தீவிர கவனம் செலுத்துவதே நல்லது. பெயர் மாற்றத்தோடு நின்றுவிட்டால் பலனில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com