

சென்னை,
தமிழகத்தில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக, தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரைவில் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரது வீட்டிலும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, 2023-ம் ஆண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மணல் திருட்டு தொடர்பாக காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, மணல் குவாரிகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் மூலம் ரூ.4,730 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் உள்ளிட்டோர் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையைத் தொடங்கி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த முறைகேடு தொடர்பாக நேற்று 34 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மணல் குவாரி முறைகேட்டில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குவாரி உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அவர்களது நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை ஆய்வு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக, ஒரு துறையில் முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் நிலையில், அந்தத் துறையின் முன்னாள் அமைச்சரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்படுவது வழக்கம். ஆனால், மணல் குவாரி முறைகேடு தொடர்பாக 34 இடங்களில் சோதனை நடைபெற்றபோதிலும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் சோதனை நடத்தப்படவில்லை.
இதனால், அடுத்தகட்டமாக துரைமுருகனின் வீட்டிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வழக்கில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக விரைவில் சம்மன் அனுப்பவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் 26-ந்தேதி தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது மணல் குவாரி முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், பெரியார் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதிலும் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் தொடர்பாக விசாரணை மற்றும் சோதனைகள் நடைபெற்று வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.