

நெல்லை மாவட்டம், மானூர் அருகேயுள்ள பருத்திக்குளம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி மகன் ராஜா(எ) ராஜ்குமார் (வயது 30). இவருக்கு சுபா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். ராஜ்குமார் கடந்த ஒரு ஆண்டாக தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம், மாநகராட்சி பாதாள சாக்கடைப் பராமரிப்புப் பணியில் தூய்மைப் பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை 5 மணி அளவில், தூத்துக்குடி ஆதிபராசக்திநகர் பகுதியில் ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு பேர் பாதாள சாக்கடைப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சங்கர் என்ற பணியாளர் சாக்கடைக்குள் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக ராஜ்குமார் உள்ளே இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக விஷவாயு கசிந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதில் மயக்கமடைந்த ராஜ்குமார் சாக்கடைக்குள்ளேயே விழுந்தார். சங்கரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ராஜ்குமாரை மீட்டனர். இருப்பினும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார், ராஜ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் உயிரிழந்த பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூய்மைப் பணியாளர் சங்க நிர்வாகிகள் சம்பவ இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.