திருச்செந்தூரில் பாதாள சாக்கடைக்குள் விழுந்து தூய்மை பணியாளர் சாவு

திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் கழிவுநீர் ரோட்டில் சாக்கடையாக ஓடிக் கொண்டிருந்தது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை வைகாசி விசாகம் திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நகராட்சி சார்பில் நகர் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் கழிவுநீர் ரோட்டில் சாக்கடையாக ஓடிக் கொண்டிருந்தது. இதை சுத்தம் செய்யும் பணியில் நெல்லை மானூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றும் பால்ராஜ் மகன் சுடலைமணி (வயது 40) ஈடுபட்டிருந்தார்
அப்போது கழிவுநீர் லாரியில் இருந்து பிளாஸ்டிக் குழாயை எடுத்து பாதாள சாக்கடைக்குள் இறக்கும்போது, திடீரென அவரும் பாதாள சாக்கடைக்குள் விழுந்தார். உடனடியாக அவருடன் பணிபுரிந்து கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் பாதாள சாக்கடை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து, திருச்செந்தூர் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர். அதன் பின்னர் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் உடலை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






