மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி

நாகை குப்பை கிடங்கில், மின்கம்பியில் உரசியதால் லாரி தீப்பிடித்து எரிந்தது. அப்போது லாரியில் இருந்த தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி பலியானார். உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

நாகை குப்பை கிடங்கில், மின்கம்பியில் உரசியதால் லாரி தீப்பிடித்து எரிந்தது. அப்போது லாரியில் இருந்த தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி பலியானார். உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பை கிடங்கு

நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், மேலகோட்டை வாசல்படி அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் தரம் பிரித்து உர கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நாகை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 165 பேர் நேற்று காலை துப்புரவு பணியில் ஈடுபட்டு இருந்தனர். வார்டுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை டிப்பர் லாரியில் ஏற்றி குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

தீப்பிடித்து எரிந்த லாரி

குப்பைகளை கொட்டும் பணியில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஜோதி(வயது 31) மற்றும் நாகூர் அமிர்தா நகரை சேர்ந்த ஒப்பந்த தூய்மை பணியாளர் விஜய்(26) ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர்.

குப்பைகளை கிடங்கில் கொட்டி விட்டு லாரி திரும்பி சென்றபோது அந்த பகுதியில் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் லாரியில் மின்சாரம் பாய்ந்தது. உடனே லாரி தீப்பிடித்து எரிந்தது.

மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் சாவு

அப்போது லாரியில் இருந்த தூய்மை பணியாளர் விஜயையும், டிரைவர் ஜோதியையும் மின்சாரம் தாக்கியது. இதில் விஜய் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் ஜோதி படுகாயம் அடைந்தார்.

அதைப்பார்த்து அங்கு பணியில் இருந்த சக ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து விஜய்யின் உடலை மீட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மின்சாரம் தாக்கி இறந்த விஜய் உடலை பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்த லாரி டிரைவர் ஜோதியை சிகிச்சைக்காக நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூய்மை பணியாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமையில் நாகை புதிய பஸ் நிலையம் எதிரில் அரசு மருத்துவக்கல்லூரி வாசலில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி வாகனங்களை பஸ் நிலைய நுழைவு வாயிலின் முழுவதுமாக அடைத்து நிறுத்தியதால் பஸ் நிலையத்தில் இருந்து வாகனங்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

நிவாரணம் வழங்க கோரிக்கை

தகவல் அறிந்து நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். படுகாயம் அடைந்த லாரி டிரைவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை

அப்போது உயிரிழந்த தூய்மை பணியாளர் விஜய்யின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக நகர்மன்ற தலைவர் மாரிமுத்து உறுதி அளித்தார்.

இதையடுத்து தூய்மை பணியாளர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் விஜய்க்கு மஞ்சுளா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com