

சென்னை,
சென்னை யானைக்கவுனி கல்யாணபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் காந்தி (வயது 43). இவர், சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட மயிலாப்பூர் 125-வது வார்டில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர், மயிலாப்பூர் நடுத்தெருவில் உள்ள குப்பைத்தொட்டி யில் குப்பைகளை சேகரித்த போது, 7 பவுன் தங்க சங்கிலி கேட்பாரற்று கிடந்துள்ளது.
சுமார் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகையை அவர் எடுத்து நேர்மையாக மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த நகை மயிலாப்பூர் சாலை தெருவைச் சேர்ந்த ரமா (52) என்ற பெண்ணுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. அவர் இந்த நகை தன்னுடைய துதான் என்பதற்கான ஆதாரங்களை காட்டினார்.
இதையடுத்து தூய்மை பணியாளர் மோகன் காந்தி மூலம் அந்த பெண்ணிடம் போலீசார் 7 பவுன் நகையை ஒப்படைத்தனர். அவருக்கு அந்த பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்கள். தூய்மை பணியாளர் மோகன் காந்தியின் நேர்மையை பாராட்டி அவருக்கு மயிலாப்பூர் உதவி கமிஷனர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.