சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது

சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் குதித்தனர்.
இதனையடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த துய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவில் போலீசாரால் அதிரடியாக குண்டுகட்டாக தூக்கி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அடையாறு, கிண்டி, சைதாபேட்டை, வேளச்சேரியில் உள்ள சமூக நல கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். துய்மை பணியார்கள் கைதுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வாகனத்தில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரிப்பன் மாளிகை முன் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






