

சென்னை,
சென்னை ஆவடியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட தூய்மை பணியாளர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்கா பகுதியில் இன்று காலை தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. பணியாளர்கள் உணவை உட்கொண்டிருந்தபோது, வழங்கப்பட்ட சாம்பாரில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதற்குள் அந்த உணவை சாப்பிட்ட பல பணியாளர்களுக்கு அடுத்தடுத்து திடீர் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டன.
இதில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக ஆவடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
"ஏற்கனவே ஒருமுறை வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்தன, இன்று சாம்பாரில் பல்லி விழுந்துள்ளது; எங்களுக்கு வழங்கப்படும் உணவில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்பட்டு வருகிறது" என பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தங்களது வேதனையைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.