

தென்காசி,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தை டாஸ்மாக் கடை முன்பு நிறுத்தி மது பானம் வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டி நோக்கி TN 72 N 2826 என்ற பதிவு எண் கொண்ட அரசுப் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை முன்பு இந்த பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது.
பேருந்து நின்றதும், மதுபானக் கடைக்குள் இருந்து வெளியே வந்த நபர் ஒருவர் கையில் மது பாட்டிலுடன் பேருந்தை நோக்கிச் சென்றார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்தபடி, "பயணிகளுடன் செல்லும் பேருந்தை நிறுத்தி யாருக்காக மது வாங்குகிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த நபர், பேருந்து நடத்துநருக்காக மது பானம் வாங்கித் தருவதாகப் பதிலளித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
பயணிகளின் உயிருக்குப் பொறுப்பான அரசுப் பேருந்து ஊழியர்களின் இந்த செயல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து அந்த பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் பேருந்தின் தற்காலிக நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.