கள்ளக்குறிச்சி: பள்ளியில் விளையாடியபோது மயங்கி விழுந்து 7-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

மதிய உணவு இடைவேளையின் போது, அவர் பள்ளியின் மைதானத்தில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
சங்கராபுரம் அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவன் உயிரிழப்பு.
மாணவன் உயிரிழப்பு
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு பள்ளியில் விளையாடியபோது 7- ஆம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அரசு பள்ளி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவன் புவின்குமார் (வயது 13). இந்த மாணவன் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவன் வழக்கம் போல் இன்று (வியாழக்கிழமை) காலை பள்ளிக்கு வந்துள்ளார். மதிய உணவு இடைவேளையின் போது, அவர் பள்ளியின் மைதானத்தில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

திடீர் மயக்கம்

விளையாடிக் கொண்டிருக்கும் போதே மாணவன் புவின்குமார் திடீரென நிலைதடுமாறி தரையில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த சக மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மாணவன் உயிரிழப்பு

மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். காலையில் துள்ளிக் குதித்து பள்ளிக்கு வந்த தங்களது மகன் மதியத்திற்குள் பிணமாகக் கிடப்பதைக் கண்டு, பெற்றோர்களும் உறவினர்களும் ஆஸ்பத்திரியில் கதறி அழுதது பார்ப்போரைக் கண் கலங்க வைத்தது .

போலீஸ் விசாரணை

இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் என்ன, விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் உடல்நலக் குறைபாடு காரணமா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி வளாகத்திற்குள் மாணவன் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com