சாந்தோம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆளும் கட்சி ‘பேனர்கள்’

சாந்தோம் பகுதியில் ஆளும் கட்சியினர் வைத்துள்ள பேனர்களினால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார்.
சாந்தோம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆளும் கட்சி ‘பேனர்கள்’
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் முறையாக அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்படுவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பேனர்கள் வைப்பதற்கு முறையான அனுமதியினை பெறவேண்டும். அனுமதி பெறாமல் பேனர்கள் வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அரசு அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை என்று அவர்கள் மீது ஏராளமான கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்கும் ஐகோர்ட்டு, அதிகாரிகளின் செயல்களுக்கு, கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் நேற்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.

அப்போது கோர்ட்டில் இருந்த அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணிடம், பொதுமக்களுக்கு இடையூறாக சாந்தோம் பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாக தலைமை நீதிபதி கூறினார்.

நான் ஐகோர்ட்டுக்கு வரும்போது, சாந்தோம் பகுதியில் நடைபாதையை மறித்து ஆளும் கட்சியினர் ஏராளமான பேனர்களை வைத்திருப்பதை பார்த்தேன். இதனால், நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். நடைபாதையில் பேனர்கள் வைக்க அதிகாரிகளால், அனுமதி வழங்க முடியாது. அப்படி இருக்கும்போது, எப்படி இந்த பேனர்களை நடைபாதையில் ஆளும் கட்சியினர் வைத்தனர்? சட்டவிரோத பேனர்களை வைக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டும், அந்த உத்தரவை ஏன் அதிகாரிகள் அமல்படுத்தாமல் உள்ளனர்? இதுகுறித்து சட்டப்படி தகுந்த நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

அதற்கு அட்வகேட் ஜெனரல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும், விதிமீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com