சாந்தோம் புனித தோமையார் தேர்ப்பவனி - திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

புனித தோமையார் தேர்ப்பவனி, சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக, சாந்தோம் பேராலயத்தை அடைந்தது.
சென்னை சாந்தோமில் உள்ள புனித தோமையார் தேசிய திருத்தலத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 2-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 3-ந்தேதி குடும்ப விழாவும், நேற்று ''நற்கருணை நம்பிக்கையின் மறைபொருள்'' என்ற தலைப்பில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் எஸ்.அந்தோணிசாமி தலைமையில் நற்கருணை பெருவிழாவும் நடைபெற்றது.
இந்த நிலையில் தேர்த் திருவிழா இன்று மாலை வெகுவிமரிசையாக நடந்தது. ''துணிச்சலான தோமா'' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த தேர்த் திருவிழாவுக்கு, புதுச்சேரி திரு இருதய ஆண்டவர் பேராலய அதிபர் எஸ்.பிச்சைமுத்து தலைமை தாங்கினார்.

சென்னை பட்டினப்பாக்கம் தூய நற்றுணை அன்னை ஆலயத்தில் இருந்து தொடங்கிய புனித தோமையார் தேர்ப்பவனி, சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக, சாந்தோம் பேராலயத்தை அடைந்தது. பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை புனித தோமையார் தேசியத் திருத்தலத்தின் அதிபர் வின்சென்ட் சின்னதுரை உள்ளிட்ட ஆலய மக்கள் செய்திருந்தனர்.
கடந்த 2-ந்தேதி தொடங்கிய புனித தோமையார் பெருவிழா நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதனையொட்டி நாளை மாலை 5.45 மணிக்கு கொடியிறக்க நிகழ்வு நடைபெறுகிறது. உயிர் தந்த உண்மை சாட்சி தோமா என்ற தலைப்பில் பாதிரியார்கள் அருளப்பா, அருள்ராஜ், அந்தோணி ஆகியோர் சிறப்பு திருப்பலியை முன்னெடுக்க உள்ளனர்.