

துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார்
தமிழக கவர்னரும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக என்.எஸ்.சந்தோஷ்குமாரை நியமனம் செய்துள்ளார். அதற்கான ஆணையை ராஜ்பவனில் நேற்று கவர்னர் வழங்கினார். அப்போது கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் வி.பாட்டீல் உடன் இருந்தார்.
துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் என்.எஸ்.சந்தோஷ்குமாரின் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும். இவர் 26 ஆண்டுகள் சிறந்த கற்பித்தல் அனுபவத்தை பெற்றவர். மேலும் தமிழக அரசின் சட்டக் கல்வி இயக்குனராக 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.
பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு இருக்கும் சந்தோஷ்குமார், சர்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி நிகழ்வுகளில் ஆய்வு கட்டுரைகளை வழங்கி இருக்கிறார். . 2 புத்தகங்களை எழுதி இருக்கும் அவர், 7 பேரின் ஆராய்ச்சி படிப்புக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.
சட்டக் கல்வி இயக்குனர், மெட்ராஸ் சட்டக் கல்லூரி, கோவை, திருச்சி மற்றும் நெல்லை அரசு சட்டக் கல்லூரி முதல்வர், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கன்வீனர் கமிட்டியின் தலைவராக இருந்திருக்கிறார்.
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் பிற மாநில பல்கலைக்கழகத்தின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினராகவும் சந்தோஷ்குமார் பணியாற்றியுள்ளார்.சட்டக் கல்வி இயக்குனராக இருந்து 7 புதிய சட்டக் கல்லூரிகளை தொடங்கி வைத்தும், 11 புதிய முதுநிலை சட்டப் படிப்புகளை அறிமுகம் செய்தும் வைத்துள்ளார்.
மேற்கண்ட தகவல் கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.