கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர் பொறுப்பேற்பு

கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர் பொறுப்பேற்பு
Published on

கோவை,

கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரக டி.ஐ.ஜி. அலுவலகம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ளது. இங்கு டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர் கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி காலையில் கோவை ரெட்பீல்டு பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து கோவை சரக டி.ஐ.ஜி.யாக சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ஆ.சரவண சுந்தர் கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த 4-ந் தேதி நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து 32-வது கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட சரவண சுந்தர் நேற்று மதியம் ரேஸ்கோர்சில் உள்ள கோவை சரக அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அங்கு அவருக்கு காவல்துறை சார்பில் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதைத்தொடாந்து அவர் தனது இருக்கைக்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது,

பொதுமக்களின் புகாகளுக்கு விரைந்து தீர்வு அளிக்கப்படும். சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து அவருக்கு 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

கோவை சரக புதிய டி.ஐ.ஜி. சரவண சுந்தர் கடந்த 2007-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். கடந்த 2007-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாகவும், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றினார். பின்னர் 2014-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், 2017-ம் ஆண்டு சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் துணை கமிஷனராகவும், சி.பி.ஐ. மும்பை மற்றும் சென்னையில் போலீஸ் சூப்பிரண்டாகவும், 2021-ம் ஆண்டு திருச்சி சரக டி.ஐ.ஜி.யாவும் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி டவுன் பகுதி ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com