சசிகலா அரசியலுக்கு வருவது என்பது அவரால் எடுக்கப்பட வேண்டிய தனிப்பட்ட முடிவு - திமுக எம்.பி.கனிமொழி

சசிகலா அரசியலுக்கு வருவது என்பது அவரால் எடுக்கப்பட வேண்டிய தனிப்பட்ட முடிவு என்றும் அதைப்பற்றி நான் எதுவும் கூற முடியாது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.
சசிகலா அரசியலுக்கு வருவது என்பது அவரால் எடுக்கப்பட வேண்டிய தனிப்பட்ட முடிவு - திமுக எம்.பி.கனிமொழி
Published on

தர்மபுரி ,

தி.மு.க. மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் தலைவர்களில் ஆண், பெண் பேதம் எல்லாம் இல்லை. சசிகலா அரசியலுக்கு வருவது என்பது அவரால் எடுக்கப்பட வேண்டிய தனிப்பட்ட முடிவு. அதைப்பற்றி நான் எதுவும் கூற முடியாது.

தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தில் வெறும் கணக்கு மட்டுமே எழுதி விட்டு பணிகளை செய்யாமல் விட்டுள்ளனர்.

நீர்நிலைகளை மூடிவிட்டு வீட்டு மனைகளாக்கி ஆளும் கட்சியினர் விற்றுள்ளனர். வேளாண் திருத்த சட்டங்கள் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் வகையில் உள்ளன. விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்படும் சட்டங்களை ஆதரிப்பவராக தமிழக முதல்-அமைச்சர் இருக்கிறார்.

தர்மபுரி மாவட்டத்தில் கருணாநிதியால் தொடங்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையில் இதுவரை எந்த தொழிற்சாலையையும் அ.தி.மு.க. அரசு தொடங்கவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்கள். இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.

பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. முதல்-அமைச்சர் தமிழகத்தில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ஆனால் பணிகள் முடிந்து எந்த திட்டமும் பயன்பாட்டிற்கு வருவதில்லை. அடிக்கல் நாட்டும் நாயகராக மட்டுமே முதல்-அமைச்சர் இருக்கிறார்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும். பெட்ரோலிய பொருட்கள் மீதான மாநில அரசின் வரியை குறைப்பது தொடர்பாக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். தர்மபுரி மாவட்டத்தில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ள ஒகேனக்கல் குடிநீர் திட்டம் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 100 சதவீதம் முழுமையாக செயல்படுத்தப்படும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி.கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com