நெல்லை, தென்காசியில் தொடர்ந்து நடைபெறும் சட்டவிரோத செயல்கள் - சசிகலா கண்டனம்

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது என சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலா
Published on

சென்னை,

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தாக்குதல், மிரட்டல் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தொடரும் சட்டவிரோத செயல்கள்

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் சட்டவிரோத செயல்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை அச்சுறுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

பணம் கேட்டு மிரட்டல்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் நேற்று முன்தினம் இரு சக்கர வாகனங்களில் வந்த கும்பல் மணிகண்டன் என்பவரை வழி மறித்து பணம் கேட்டு மிரட்டி அவரை தாக்கியுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து வாகைகுளம் பகுதியில் உள்ள சிற்பக்கலை தொழிற்கூட உரிமையாளர் செல்வகணேசனை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் அங்கு சென்று, அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த நபரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றுள்ளதாகவும், மேலும், அந்த வழியில் சாலையோரமாக நடந்து சென்றவரையும் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

6 நபர்கள் மீது தாக்குதல்

இதே கும்பல் நேற்றைய தினமும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த நெட்டூரில் 6 நபர்களை தாக்கி காயம் ஏற்படுத்தி சென்றுள்ளதாகவும், பின்னர், அங்கிருந்து தப்பி செல்லும் போது மானூர் அடுத்த தெற்குப்பட்டி பகுதியில் சாலையோரத்தில் இருந்த முபாரக் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகிய இருவரையும் தாக்கி விட்டு சென்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடுமையான நடவடிக்கை வேண்டும்

இவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவர்மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், தென் மாவட்டங்களில் இது போன்ற சட்டவிரோத செயல்கள், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் செயல்கள் இனி எங்குமே நடைபெறாதவாறு தமிழக காவல்துறை விழிப்புடன் செயல்பட்டு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது

புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. சட்டம் ஒழுங்கு சரியாக பேணி பாதுகாக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் போன்று தற்போது எடுத்தால்தான் சட்டம் ஒழுங்கு சீராகும், மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com