

சென்னை,
புதுச்சேரியில் லட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தும் நவீன்பாலாஜி உள்ளிட்ட 5 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், நாங்கள் நடத்தி வந்த ஓசியன் ஸ்பிரே என்ற கேளிக்கை விடுதியை ரூ.168 கோடிக்கு வாங்குவதாக கடந்த 2016-ம் ஆண்டு வி.கே.சசிகலாவின் பிரதிநிதிகள் 2 பேர் எங்களிடம் விலை பேசினர். அப்போது மத்திய அரசு ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்து இருந்தது. ஆனால், ரூ.135.25 கோடிக்கு மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கொடுத்து, இதை மாற்ற முடியவில்லை என்றால், திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறினர். இதில், ரூ.37 கோடியை எங்களால் மாற்ற முடியவில்லை. இந்த விவரங்கள் அனைத்தையும், வருமான வரித்துறை நடத்திய விசாரணையின்போது கூறியுள்ளோம்.
இந்தநிலையில், எங்களை வி.கே.சசிகலாவின் பினாமிகள் என அறிவித்து எங்களது சொத்துகளை முடக்கி வருமான வரித்துறை கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் நேற்று விசாரித்தார். அப்போது வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்ட நேரத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்தி இந்த பரிவர்த்தணையை மனுதாரர் தரப்பு மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணப்பிரியா மற்றும் சசிகலாவிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே பினாமிகள் தடை சட்டத்தின் கீழ் மனுதாரர்களின் சொத்துகளையும் முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த வழக்கை வருகிற மார்ச் 18-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.