சாத்தான்குளம் வழக்கு: 9 பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சி.பி.ஐ. தரப்பில் முறையீடு

9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனையை உறுதி செய்ய சிபிஐ தரப்பில் ஐகோர்ட்டு கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் வழக்கு: 9 பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சி.பி.ஐ. தரப்பில் முறையீடு
Published on

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக அங்கு உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில் அவர்கள் இருவரும் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் பால்துரை என்பவர் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

இந்த இரட்டைக் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடக்கிறது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என கடந்த 23-ந்தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் 9 போலீசாருக்கான தண்டனை விவரங்களை கடந்த 6 ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் வாசித்தார். அதில், காவல் நிலையத்தில் வைத்து இருவரும் காவல் சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர். தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் அடைத்து வைத்து தாக்கியதை எளிதாக கருத முடியாது. இருவரும் நிராயுதபாணியாக இருந்தபோதும், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். இருவரும் வியாபாரிகள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்கள் மீது எந்த குற்றவழக்கும் இல்லை என்றே தெரிகிறது.

வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது. இதுபோன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால், இப்படி செயல்படும் போலீசாருக்கு அச்சம் ஏற்படாது. எனவே இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து ஆகிய 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் போலீசார் 9 பேருக்கு, கீழமை நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் சி.பி.ஐ. தரப்பு முறையீடு செய்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது 9 குற்றவாளிகளும் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜராகினர். முதல் குற்றவாளியான ஸ்ரீதர், தானே வாதிட உள்ளதாக முறையீடு செய்ய, "முதலில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யுங்கள்” என அறிவுறுத்தி விசாரணையை வரும் 30-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com