காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்கக்கோரி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்-60 பேர் கைது

காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்கக்கோரி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்-60 பேர் கைது
Published on

சாலை மறியல்

சிறப்பு பென்ஷன் ரூ.6,750-ஐ வழங்க வேண்டும், அரசுத்துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

60 பேர் கைது

இதற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் அபராஜிதன் வாழ்த்துரை வழங்கினார். மாநில தணிக்கையாளர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் மாவட்ட பொருளாளர் கமலா, நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பத்மாவதி, ராஜேந்திரன், சவுந்தர்ராஜன், வித்யாவதனி, அமுதா, நடராஜன், வேம்பு, பூங்காவனம் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த மறியல் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 60 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com