சத்தியமங்கலம்: குட்டிகளுடன் கரும்பு லாரியை சுற்றிவளைத்த யானைக் கூட்டம்!

லாரியில் இருந்த கரும்புகளைத் தங்களது தும்பிக்கையால் இழுத்து, யானைகள் விடிய விடிய ருசித்துத் தின்றன.
சத்தியமங்கலம்: குட்டிகளுடன் கரும்பு லாரியை சுற்றிவளைத்த யானைக் கூட்டம்!
யானைகள் கூட்டம்
Published on: 

ஈரோடு,

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில், குட்டிகளுடன் வந்த காட்டு யானைகள் கூட்டம் கரும்பு லாரியை விடிய விடிய முற்றுகையிட்ட சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழுதாகி நின்ற லாரி

கர்நாடக மாநிலம் மற்றும் தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கரும்புகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, நேற்று (திக்கட்கிழமை) சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலை நோக்கிச் சென்றது. ஆசனூர் மற்றும் திம்பம் மலைப்பாதை அருகே சென்றபோது, நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக லாரி பழுதடைந்தது. இதனால் ஓட்டுநர் லாரியை சாலையோரத்தில் நிறுத்தினார்.

விடிய விடிய விருந்து

அப்போது, நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து 2 குட்டிகளுடன் வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம், கரும்பு லாரியை சுற்றி வளைத்தது. லாரியில் இருந்த கரும்புகளைத் தங்களது தும்பிக்கையால் இழுத்து, யானைகள் விடிய விடிய ருசித்துத் தின்றன.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வனச்சாலையைக் கடந்த வாகன ஓட்டிகள், லாரியை யானைகள் சூழ்ந்திருப்பதைப் பார்த்து அச்சமடைந்து தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். இதனால் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வனத்துறை நடவடிக்கை

தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் அங்கிருந்த வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் ஹாரன் ஒலிகளை எழுப்பியதைத் தொடர்ந்து, யானைகள் கூட்டம் கரும்புகளைத் தின்றவாறே மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றன. அதன் பின்னரே போக்குவரத்து சீரானது. கரும்பு லாரிகளைப் பின்தொடர்வதை யானைகள் வழக்கமாகக் கொண்டுள்ளதால், இப்பகுதியில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com