சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து - உரிமையாளர் கைது

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பல அறைகள் தரைமட்டமாகி கிடந்தன.
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து - உரிமையாளர் கைது
Published on

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா தாயில்பட்டி அருகே சத்திரப்பட்டியில் நாக்பூர் மினி உரிமம் பெற்ற பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. 30-க்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் அதில் உள்ளன. இந்த ஆலையை சிவகாசியை சேர்ந்த கண்ணன் (வயது 52) என்பவர் நடத்தி வருகிறார்.

நேற்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பு தீவிரமாக நடந்து வந்தது. சற்று நேரத்தில் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு வெடித்துச்சிதறியது. இதையடுத்து அங்கிருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துச்சிதறின. அடுத்தடுத்த பட்டாசு அறைகளில் இருந்த பட்டாசுகளும் வெடிக்கத்தொடங்கியதால் பெரும்பாலான தொழிலாளர்கள் பதறியபடி வெளியே ஓடிவந்தனர். இதில் பல அறைகள் தரைமட்டமாகி கிடந்தன.

தகவல் அறிந்து சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பட்டாசுகள் வெடித்த வண்ணம் இருந்ததால் ஆலைக்குள் நுழைய முடியாத நிலை இருந்தது. வெடிச்சத்தம் குறைந்ததும் ஆலைக்குள் நுழைந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தரைமட்டமான அறைகளின் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் தாயில்பட்டி ஊராட்சி வினோபா காலனியை சேர்ந்த மகாலிங்கம் என்பவருடைய மகன் பாண்டியராஜ் (38) சம்பவ இடத்திலேயே உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மடத்துப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (42) மேல கோதைநாச்சியார்புரம் செல்வம் (33), ரமேஷ் (42), ஜெயா, ராமலட்சுமி உள்பட 9 தொழிலாளர்கள் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் கண்ணன், போர்மேன் சத்திரப்பட்டியை சேர்ந்த முனியசாமி (43) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். போர்மேன் முனியசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வெடிவிபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்பதும், சோல்சா வெடிகள், அணுகுண்டு உள்ளிட்ட வெடிகள் தயாரித்ததும் தெரியவந்து இருப்பதாக போலீசார் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com