தண்ணீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்:ஆனைமலையன்பட்டி கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

தண்ணீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று ஆனைமலையன்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தினார்.
தண்ணீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்:ஆனைமலையன்பட்டி கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
Published on

உலக தண்ணீர் தினத்தையொட்டி, தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி, ஆனைமலையன்பட்டியில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மீனா மும்மூர்த்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சேகர் சிறப்பு தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது, உலக தண்ணீர் தினத்தையொட்டி, பொதுமக்களிடம் தண்ணீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் எதிர்கால சந்ததியினருக்காக இனி தண்ணீரை சேமித்தே ஆக வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது.

எதிர்காலம் மிகப்பெரிய தண்ணீர் சவாலை சந்திக்கும் முன் மழைநீரை சேமிப்பது மிகவும் அவசியம். இந்த ஊராட்சியில் தண்ணீருக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை. தீண்டாமை இல்லாத கிராமமாக இது உள்ளதால் ரூ.10 லட்சம் சிறப்பு நிதி வழங்கப்படுகிறது. இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளம், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு தண்ணீரை சேமிக்கவும், ஒவ்வொரு பருவகாலத்திலும் பெய்யும் மழை நீரை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் மதுமதி, ஊராட்சி உதவி இயக்குனர் அண்ணாத்துரை, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இன்பென்ட் பனிமய ஜெப்ரின், ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஜெயகாந்தன், சென்பகவள்ளி, ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி, ஊராட்சி துணை தலைவர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com