

தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா புலவஞ்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரப்பன். இவருடைய மனைவி வீரம்மாள். இவர் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதனிடம் புகார் மனு அளித்தார்.
அதில், ஆம்பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் அவரது உறவினர் வீட்டிற்கு வந்தார். அவர் என்னிடம் நன்றாக பழகினார். அப்போது தான், மத்திய அரசில் வேலை பார்த்து வருவதாகவும், பிரதமர் மோடி அறிவித்துள்ள திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் கட்டினால் 2 மடங்கு தொகையும், ரூ.50 ஆயிரம் கட்டினால் 3 மடங்கு தொகையும், 1 பவுன் வழங்கினால் 2 மடங்காகவும், 10 பவுன் கொடுத்தால் 3 மடங்காகவும் திருப்பி தரப்படும் என ஆசை வார்த்தை கூறினார்.
இதை உண்மையென நம்பி நான் ரூ.3 லட்சமும், 11 பவுன் நகையும் கொடுத்தேன். மேலும் எனது உறவினர்கள் 10 பேரிடம் பணமும், 12 பேரிடம் நகையும் வாங்கி கொடுத்தேன். மொத்தம் ரூ.10 லட்சமும், 135 பவுன் நகையும் அந்த பெண்ணிடம் கொடுத்தேன். இந்த நிலையில் பணத்தையும், நகையையும் நானும், எனது உறவினர்களும் ஆம்பலாபட்டுக்கு சென்று அந்த பெண்ணிடம் கேட்டபோது தகாத வார்த்தைகளால் அந்த பெண் திட்டியதுடன், அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.
இதனால் உயிருக்கு பயந்து நானும், என்னுடன் வந்த எனது உறவினர்களும் திரும்பி வந்து விட்டோம். எனவே பிரதமரின் பெயரை பயன்படுத்தி ஆசை வார்த்தைகளை கூறி என்னை ஏமாற்றி, என்னிடமும் என் மூலம் எனது உறவினர்களிடமும் மோசடி செய்ததுடன், என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டிய பெண் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் பணத்தையும், நகையையும் மீட்டுத் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதேபோல் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனித்தனியாக புகார் மனு அளித்திருந்தனர்.
இந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஆம்பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெண்ணை போலீசார் நேற்று தஞ்சையில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர்.
மேலும் பணம், நகை கொடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. எனவே 31-ந் தேதி பாதிக்கப்பட்டவர்கள் வரும்போது நேரில் வர வேண்டும் என அந்த பெண்ணுக்கு போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.