

சென்னை,
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல் களை பாடியவர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவருக்கு வயது 74. கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. 2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், கடந்த 13-ந்தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமானது. அவரது உடல்நிலையை தீவிர சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். தற்போதைய சூழலில் அவரது உடல்நிலை தொடாந்து கவலைக்கிடமாகவே இருந்தாலும், முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவமனை நிவாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டி இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தபடியே திரைப்பிரபலங்கள் மவுன கூட்டு ரார்த்தனையில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் எஸ்.பிபி பாடல்களை ஒலிக்க விட்டு ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். எஸ்.பி பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை முன்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.