திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின மக்கள் இந்திய அளவில் சிறப்பான முன்னேற்றம் - தமிழக அரசு

தமிழ்நாடு தூய்மையான மாநிலம் என மத்திய அரசினால் விருது வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின மக்கள் இந்திய அளவில் சிறப்பான முன்னேற்றம் - தமிழக அரசு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ‘’எல்லார்க்கும் எல்லாம்’’ என்னும் தத்துவம் வெல்ல சமூக நீதி கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் தந்து வருகிறார். ஆதிதிராவிட -பழங்குடியின இளைஞர்களின் உயர்கல்வி வளர்ச்சிக்கு அதிக அளவில் நிதியுதவிகளை வழங்குகிறார். தொழில் மேம்பாட்டிற்கு ஆதிதிராவிட -பழங்குடியினர் தொழில் முனைவர்களாக உயர்கின்றனர்.

கல்வி வளர்ச்சி திட்டங்கள்

முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆதிதிராவிட –பழங்குடியின இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்காக அளித்து வரும் உதவிகளுடன் கூடிய ஊக்கங்களால் 2025-ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 82 சதவீதம் என்பது 91.85 சதவீதமாகவும், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 84.55 சதவீதம் என்பது 95.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

2024-2025 ஆம் கல்வியாண்டில் IIT, NIT, NIFT மற்றும் FDDI போன்ற தேசியக்கல்வி நிறுவனங்களில் 16 பட்டியல் இன மாணவர்கள் இடம்பிடித்தனர். 2025-2026 ஆம் கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 135 மாணவர்கள் என உயர்ந்து மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது.

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் பள்ளிகளில் ரூ.456.83 கோடி நிதி ஒதுக்கீட்டில் 868 வகுப்பறைகள் கட்டப்பட்டு; பாதுகாப்பான சுற்றுச்சுவர்கள், நவீன கழிப்பறைகள், சுகாதாரமான சமையலறைகள் உள்ளிட்ட 417 கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மூன்றாம்வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.6,604.17 கோடி வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சியில் 10 ஆண்டுகளில் 6 மாணவர் பயன்; திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகளில் 440 மாணவர் பயன்

அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ. 3 இலட்சம் என்பது ரூ.8 இலட்சமாக உயர்த்தப்பட்டு; ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.36 இலட்சம் வரை உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் உதவிபெற்று முந்தைய ஆட்சியில் 10 ஆண்டுகளில் 6 மாணவர்கள் மட்டுமே வெளிநாடுகளில் பயின்றனர். திராவிட மாடல் ஆட்சியில் ரூ.75.54 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டு 440 மாணவர்கள் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதல் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் அருமையான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

முனைவர் பட்ட ஆராய்ச்சி ஊக்கத்தொகை

முனைவர் பட்ட ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டத்தின்கீழ், ஆதிதிராவிட பழங்குடியினங்களைச் சேர்ந்த 8,886 ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.88.86 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

செவிலியர் பட்டயப் படிப்பு உதவித்தொகை 184 பழங்குடியின மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.70,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

பயிற்சிகள் வழங்கப்பட்டு ஐ.ஐ.டி, என்.ஐ.டி நிறுவனங்களில் பயில்கின்றனர்.

‘’என் கல்லூரிக் கனவு’’ திட்டத்தில் 2.52 கோடி செலவில் 59 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளின் மாணவர்களுக்கு உயர்கல்வித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு 111 மாணவர்களும், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளைச் சேர்ந்தப் 26 மாணவர்களும் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று IIT, NIT, தேசிய சட்டக் கல்லூரி முதலான தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கைபெற்றுப் பயில்கின்றனர்.

ரூ.1,143 கோடி நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய 77 புதிய விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. 113.45 கோடியில் 663 பழைய விடுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தொழில் முகவர்களாக ஆதிதிராவிட பழங்குடியின மக்கள்

பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52,255 ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு ரூ.409.68 கோடி மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்பட்டுத் தொழில் முகவர்களாக மேம்படுத்தப்பட்டுள்ளனர்..

விரிவான வாழ்வாதார மேம்பாட்டுத் திறன் பயிற்சிகள் திட்டத்தின்கீழ் 10,740 பழங்குடியின பயனாளிகளுக்கு ரூ.254.31 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு . க ஸ்டாலின் அவர்கள் 2023 ஆம் ஆண்டில் புத்தாக்கத் தொழில் கொள்கையை வெளியிட்டு அளித்து வரும் ஊக்கம் காரணமாக இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் வாழும் ஆதிதிராவிட பழங்குடியினரில் 43 பேர் தொழில் முனைவர்களாக உயர்ந்துள்ளனர். அவர்களுக்கு ரூ.60.80 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிரை நில உடமையாளர்களாக உயர்த்தும் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் ரூ.49.35 கோடி மானியம் வழங்கப்பட்டு 1,042 மகளிர் நில உடைமையாளராக மாற்றப்பட்டனர்.

3 லட்சத்திற்கும் மேல் இலவசப் பட்டாக்கள்

வீடற்ற ஆதிதிராவிடர்/பழங்குடியினமக்களுக்கு மொத்தம் 3,09,707 இலவச வீட்டுமனை இ-பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.1000 கோடியில் அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்

அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில், 8,535 உட்கட்டமைப்புப் பணிகள் ரூ.910 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரூ.117.27 கோடியில் 120 கிராம அறிவு மையங்களும், ரூ.40 கோடியில் 52 அறிவுச் சுடர் மையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

ரூ.1,000 கோடியில் தொல்குடி மேம்பாட்டுத் திட்டம்

தொல்குடித் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பழங்குடியினர் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் ரூ.1,000 கோடி செலவில் குடிசை வீடுகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள், சாலைகள், குடிநீர், தெருவிளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.

விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் (CTDP): ரூ.158.46 கோடிமதிப்பீட்டில் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, வாழ்வாதாரம் மற்றும் சட்ட உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 5,374 பணிகள், செயல்படுத்தப்பட்டுள்ளன.

பழங்குடியினர் நரிக்குறவர் சமுதாயங்களுக்கு வீடுகள்

அழிவின் விளிம்பிலுள்ள வீடுகளற்ற பண்டைய பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமூகங்களுக்கு ரூ.315.44 கோடி செலவில் 7,255 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் ரூ.32.6 கோடி செலவில் 28 சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டு; பண்டைய பழங்குடியினருக்கு ரூ.10.33 கோடியில் 60 பல்நோக்கு மையங்களும், பழங்குடியினர் குடியிருப்புகளில் ரூ.5.75 கோடியில் 23 சமுதாயக் கூடங்களும் கட்டப்படுகின்றன.

பழங்குடியின மாணவர்கள் கற்பதற்குத் தேவையான சூழலை உருவாக்கும் வகையில் 117.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 120 கிராம அறிவுசார் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 125.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 126 அறிவு மையங்கள் கட்டப்படுகின்றன.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள்

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட பழங்குடியினர் 22,244 பேர்களுக்கு ரூ.287.47கோடி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 586 பேருக்குக் கருணை அடிப்படையில் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.

தூய்மைப் பணியாளர்களுக்கு வீடுகள்

தூய்மைப் பணியாளர்களுக்கு 90 சதவீதம் அரசு மானியத்துடன் 1,000 வீடுகள் ரூ.110 கோடி செலவில் வழங்கப்பட்டன. மேலும், 30,000 வீடுகள் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 15.11.2025 அன்று 870 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

1,29,689 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 213.92 கோடி செலவில் மூன்று வேளையும் உணவு வழங்கும் தாயுமானவர் நம் முதலமைச்சர்

தமிழ்நாடு தூய்மையான மாநிலம் என மத்திய அரசினால் விருது வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளது. இந்தப் பெருமையைத் தமிழ்நாட்டிற்குத் தேடித்தந்துள்ள தூய்மைப் பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கியுள்ளார்கள். இத்திட்டத்தின்கீழ் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் அனைத்திலும் பணியாற்றும் 1,29,689 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 213.92 கோடி செலவில் மூன்று வேளையும் உணவு வழங்கும் மகத்தான திட்டத்தை நிறைவேற்றி தாயுமானவர் எனப் போற்றப்படுகிறார் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

சிறந்த எழுத்தாளர்களுக்கு உயர்த்தப்பட்ட பரிசுத் தொகை

கதை, கட்டுரை, கவிதை, வரலாறு மற்றும் நாவல் ஆகியவற்றில் சிறந்த படைப்புகளை உருவாக்கிடும் ஆதிதிராவிட பழங்குடியின எழுத்தாளார்களுக்குப் பரிசுத் தொகை ரூ.50 ஆயிரம் என்பது ரூ.1 இலட்சமாக உயர்த்தப்பட்டு 43 எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்படி அனைத்து வகையிலும் ஆதிதிராவிட பழங்குடியின சமூகங்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படுத்தி வரும் திட்டங்களால் இந்திய அளவில் தமிழ்நாட்டின் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் சிறப்பான முறையில் முன்னேற்றம் கண்டு வாழ்க்கையில் உயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com