"2011-க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்கள் மீண்டும் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டியதில்லை" - ஐகோர்ட் விளக்கம்

2011-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க அவசியம் இல்லை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
"2011-க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்கள் மீண்டும் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டியதில்லை" - ஐகோர்ட் விளக்கம்
Published on

சென்னை,

தனியார் பள்ளிகள் நடப்பு கல்வி ஆண்டுக்கு அங்கீகாரம் கோரியும், அங்கீகாரத்தை புதுப்பிக்கக் கோரியும் விண்ணப்பிக்கும் போது பள்ளி கட்டடத்திற்கான ஒப்புதல் சான்றை இணைக்க வேண்டும் அல்லது ஒப்புதல் கோரி அளித்த விண்ணப்பத்த ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாணை பிறப்பித்திருந்தது.

இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம் 47-ஏ பிரிவின் படி, 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களுக்கு மீண்டும் கட்டட அனுமதியோ, திட்ட அனுமதியோ பெறுவது கட்டாயம் இல்லை எனவும், 2011-ம் ஆண்டுக்குப் பின் கூடுதல் கட்டடங்கள் கட்டியிருந்தால் திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி 2011-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க அவசியம் இல்லை என உத்தரவிட்டார். அதே சமயம் கூடுதல் கட்டடங்கள் கட்டியிருந்தால் அதற்கு திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும், அல்லது திட்ட அனுமதி கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும் எனவும் நீதிபதி தெளிவுபடுத்தினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com