பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் 10 மணிக்குள் அலுவலகத்துக்கு வரவேண்டும் - அதிரடி உத்தரவு

அறிவுறுத்தலை பின்பற்றாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் 10 மணிக்குள் அலுவலகத்துக்கு வரவேண்டும் - அதிரடி உத்தரவு
Published on

சென்னை,

பள்ளிக்கல்வித் துறையை சேர்ந்த பணியாளர்கள் அலுவலகத்துக்கு உரிய நேரத்தில் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அதுகுறித்த சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு தனித்தனியாக அனுப்பி இருக்கிறது.

அதில் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 'இத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் வருகை தருவதில்லை என்ற விவரம் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தலைமைச்செயலக அலுவலகக் கையேட்டின் பத்தி எண் 510-ல் உள்ள அறிவுறுத்தல்களின்படி, அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு வருகைதரவேண்டும்.

அதன்படி, துறையைச் சேர்ந்த அரசு சார்பு செயலாளர்கள், துணைச்செயலாளர்கள் மற்றும் அரசு கூடுதல் செயலாளர்கள் ஆகியோர் காலை 10 மணிக்கு முன்னரே அலுவலகத்திற்கு வருகை தருமாறு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்கண்ட அறிவுறுத்தல்கள் எவ்வித தவறுமின்றி மிகக்கண்டிப்பாக பின்பற்றப்படவேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'துறையைச் சார்ந்த அனைத்து பணியாளர்களும் காலை 10 மணிக்கு முன்னரே அலுவலகத்திற்கு வருகை தருமாறு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அலுவலகத்தை விட்டு வெளியேறுவதற்குமுன், சம்பந்தப்பட்ட 2-ம் நிலை அலுவலர்களிடம் முன்அனுமதி பெறவேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

அலுவலக உதவியாளர்கள் மற்றும் பதிவு எழுத்தர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கே அலுவலகத்தில் இருக்கவேண்டும். எவ்வகையான விடுப்பு அல்லது அனுமதி பெறுவதற்கும், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் முன்அனுமதி பெற வேண்டும் என்றும், மேலும் விடுப்புப் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மேற்கண்ட அறிவுறுத்தல்கள் மிகக் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். அவ்வாறு பின்பற்ற தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட பணியாளர்கள்மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com