

சென்னை,
சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் சிறுமி மாலை நேரத்தில் கோட்டூர்புரம் பகுதியில் உள்ள தனியார் பரத நாட்டிய பயிற்சி மையத்தில் நடனம் கற்று கொள்ள வேண்டி சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமி வழக்கம் போல் பரத நாட்டிய வகுப்புக்கு சென்றுள்ளார்.
அப்போது பரத நாட்டிய மாஸ்டரின் கணவரான உமாசங்கர் (60) சிறுமியை தனிமையில் அழைத்து பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் சம்மந்தப்பட்ட நபர் மீது கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியர் உமாசங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். தேனாம்பேட்டையில் உள்ள கணக்கு தணிக்கை அலுவலகத்தில் உதவி மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் உமா சங்கர். விசாரணைக்கு பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். பரதநாட்டிய பயிற்சிக்கு வந்த சிறுமியிடம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.