

திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டியின் போது, விளையாடிக் கொண்டிருந்த 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு விளையாடினர். அப்போது, போட்டியில் தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்த அரசுப் பள்ளி மாணவர் முகேஷ் (வயது 17) என்பவர், எதிர்பாராத விதமாக மைதானத்திலேயே திடீரென சுருண்டு விழுந்து மயங்கினார்.
அதிர்ச்சியடைந்த சக மாணவர்களும் ஆசிரியர்களும் உடனடியாக முகேஷை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விளையாடிக்கொண்டிருந்த போதே மாணவனின் மூச்சு நின்றுபோனது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.
துடிப்போடு தங்களுடன் கபடி விளையாடிய நண்பன், கண் இமைக்கும் நேரத்தில் பிணமாக கிடப்பதைக் கண்ட சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள், அவரது உடலைப் பார்த்து ஆஸ்பத்திரியில் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களைக் கலங்க செய்தது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விளையாட்டு மைதானத்தில் மாணவர் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.