வகுப்பறையில் மாணவர் மயங்கி விழுந்து இறந்த விவகாரம்: பள்ளி தாளாளர் மீது 2 பிரிவுகளில் வழக்கு

வகுப்பறையில் மாணவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
வகுப்பறையில் மாணவர் மயங்கி விழுந்து இறந்த விவகாரம்: பள்ளி தாளாளர் மீது 2 பிரிவுகளில் வழக்கு
Published on

பெரம்பூர்,

சென்னை பெரம்பூரை அடுத்த திரு.வி.க.நகர் 17-வது தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவருடைய மகன் நரேந்தர் (வயது 15). இவர், திரு.வி.க.நகர் பல்லவன் சாலையில் உள்ள டான்போஸ்கோ உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 17-ந்தேதி பள்ளிக்கு சென்ற நரேந்தர், வகுப்பறையில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங், வாத்துபோல் நடக்கும் தண்டனை வழங்கியதால் மாணவர் மயங்கி விழுந்து இறந்தது பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யும்படி மாணவரின் உறவினர்கள் போலீஸ் நிலையம் முற்றுகை, சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து திரு.வி.க.நகர் போலீசார் பள்ளியின் முதல்வர் அருள், உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

2 பிரிவுகளில் வழக்கு

இதற்கிடையில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முடிந்து மாணவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு மாணவரின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ஜோசப் பெர்னாண்டசிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் மீது போலீசார் 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மாணவர் இறந்ததை தொடர்ந்து நேற்றும் டான்போஸ்கோ பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. திங்கட்கிழமை மீண்டும் பள்ளி திறக்கப்படும் என அறிவிப்பு வைக்கப்பட்டு உள்ளது. பள்ளி முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com