லாரி ஏறி பள்ளி சிறுமி பலி: கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு

தாயுடன் மொபட்டில் சென்றபோது நிலைதடுமாறி சாலையில் விழுந்த 5-ம் வகுப்பு மாணவி லாரி சக்கரத்தில் சிக்கி பலியானாள்.
லாரி ஏறி பள்ளி சிறுமி பலி: கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு
Published on

சென்னை,

சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு சாய்ராம் சாலை 3-வது தெருவைச் சேர்ந்தவர் யாமினி. தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் செந்தில்நாதன், உடல் நலக்குறைவால் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் அரவிந்த். இவர்களுக்கு சவுமியா(வயது 10) என்ற மகளும் இருந்தார்.

சவுமியா, புரசைவாக்கத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை மகளை பள்ளியில் விடுவதற்காக யாமினி மொபட்டில் அழைத்துச்சென்றார். பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு, வாக்கின்ஸ் தெரு சந்திப்பு வழியாக அவர் சென்றார். அப்போது சாலையில் உள்ள ஒரு சிறிய பள்ளத்தில் மொபட் இறங்கி ஏறியது.

இதில் நிலைதடுமாறிய யாமினி, இடதுபுறமாக மொபட்டுடன் கீழே விழுந்தார். பின்னால் அமர்ந்திருந்த சவுமியா, வலதுபுறமாக சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சவுமியா மீது ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய மாணவி சவுமியா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த செம்பியம் போலீசார், தண்ணீர் லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன்(41) என்பவரை கைது செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பலியான சவுமியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போக்குவரத்து போலீசார் தங்களது பணிகளை சரியாக செய்யாமல் அலட்சியமாக இருந்ததாலேயே இந்த விபத்து நடைபெற்றது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து செம்பியம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமணியை பணியிடைநீக்கம் செய்து போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். உதவி கமிஷனர் சத்யமூர்த்தி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், லாரி ஏறி பள்ளி சிறுமி உயிரிழந்ததையடுத்து கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் காலை நேரம் மற்றும் பள்ளியில் இருந்து திரும்பும் மாலை நேரங்களில் பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. பள்ளி தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரம் பள்ளிகளின் வாயிலில் காவல்துறையினர் போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும். காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகனங்களை குறைந்தது 100 நாட்கள் வரை திருப்பி ஒப்படைக்கக்கூடாது". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com