

தர்மபுரி,
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பள்ளி மாணவி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஜருகு பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி அவிநிஷா, தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையை முன்னிட்டு உறவினர்களுடன் ஒகேனக்கல் சுற்றுலா வந்த மாணவி, மெயின் அருவி அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்தது.
இதனால் அந்த மாணவி நிலைதடுமாறு ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டார். அங்கிருந்தவர்கள் மாணவியை காப்பாற்ற முயன்று முடியாமல் போனதால், உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒகேனக்கல் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவியை தீவிரமாக தேடத் தொடங்கினர்.
ஆற்றின் ஆழமான பகுதிகள் மற்றும் கரையோரங்களில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாணவி இதுவரை மீட்கப்படவில்லை. இந்த சம்பவம் ஒகேனக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.