பள்ளிகளில் இனி மாதந்தோறும் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டம்

பள்ளி கல்வித்துறையின் புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிகளில் இனி மாதந்தோறும் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. மாணவர்களுக்கு மனநல பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளன.
பள்ளிகளில் இனி மாதந்தோறும் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டம்
Published on

சென்னை,

மாணவர் நலன் கருதி பள்ளி கல்வித்துறை வரும் கல்வியாண்டில் புதிய நடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கிறது. அதன்படி, மாணவர் குறித்து பெற்றோருடைய கருத்தையும், ஆசிரியரின் கருத்தையும் இரு தரப்பும் உணர்ந்துகொள்ள ஏதுவாக, மாதந்தோறும் பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் சந்திப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் உறுதுணையுடன் நடத்தப்படும். கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இடைவெளியால் செயல்படாமல் இருக்கும் இலக்கியம், கவின்கலை, சூழலியல் சார்ந்த மன்றங்கள் பள்ளிகளில் புதுப்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்த வழிவகை செய்யப்படும்.

மாணவர்களின் பல்வேறு திறன்களை ஊக்குவிக்க ஏதுவாக கலைத் திருவிழாக்கள், பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும். கலை-விளையாட்டுத் திறன்களிலும், மன்றச் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக, இந்திய, மாநில அளவில் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். மாணவர்களின் தனித்திறமைகளை மெருகேற்ற கோடை விடுமுறையில் மலை சுற்றுலாத்தலங்களில் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். பள்ளி பாடங்கள் தவிர, சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூகநீதி, பெண்ணியம் மற்றும் எதிர்காலவியல் போன்ற பொருண்மைகளில் பயிற்சிகள் அளிக்கப்படும்.

காய்கறி தோட்டம்

மாணவர்களுக்கு தொழில்நுட்பத்திலும், கணினியிலும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கணினி நிரல் மன்றங்களும், எந்திரனியல் மன்றங்களும் ஏற்படுத்தப்படும். மேலும் இணைய பாதுகாப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும்.

வரும் கல்வியாண்டின் முதல் வாரத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுத்தல், போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்றவற்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பிசியோதெரபிஸ்ட்கள் மூலம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படும்.

பள்ளிதோறும் காய்கறி தோட்டங்கள் மாணவர்களைக் கொண்டு ஏற்படுத்தப்படும். அவற்றில் விளையும் காய்கறி, பழங்கள், கீரைகள் பள்ளியின் சத்துணவில் பயன்படுத்தப்படும். மாநில அளவில் சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடுகள் செய்யப்படும்.

மாணவர்களுக்கான இதழ்கள்

மண்டல-மாநில அளவில் சாரண-சாரணியர் முகாம்கள் நடத்தப்படும். மாணவர்களின் வாசிப்புத்திறனை ஊக்குவித்து, அவர்களின் படைப்புத்திறனை வெளிக்கொணரும் வகையில் மாணவர்களுக்கென பல்வேறு இதழ்கள் வெளிவரவிருக்கின்றன. 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் என்ற இதழும், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு என்ற இதழும் வெளிவரவிருக்கின்றன. மேலும், ஆசிரியர்களுக்கு என நாட்டிலேயே முதல் முறையாக கனவு ஆசிரியர் என்ற இதழும் வெளிவரவிருக்கிறது. மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கள் படைப்புத்திறனை வெளிப்படுத்தும்வண்ணம் இவ்விதழ்களுக்கு தங்கள் ஆக்கங்களை அனுப்பலாம்.

அறிவியல் ஆர்வமுள்ள மாணவர்களுக்கென ஸ்டெம் எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த புதிய திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதுடன், மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும்.

மனநல ஆலோசனை

மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியரின் பரிந்துரையின் பேரில் நிபுணர்களைக் கொண்டு மனநல ஆலோசனை வழங்கப்படும். மாணவர்களின் நல்லியல்புகளை மேம்படுத்தவும், நற்பண்புகளை உருவாக்கவும், பெற்றோரும், பள்ளிக்கூடமும், அரசும் இணைந்து செயல்படவேண்டிய தேவை இருக்கிறது. அத்தகைய இணைப்பை உறுதிப்படுத்துவதற்கான செயல்பாடுகள் தொடர்ந்து பள்ளி கல்வித்துறையால் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com