கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்க ஏற்பாடு

கோடை விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முதல் நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்க ஏற்பாடு
Published on

சென்னை,

பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 3-ந் தேதி (நாளை) திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகிறது என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் கடந்த சில நாட்களாக பரவி வருகின்றன. ஆனால் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இருப்பினும் கடந்த 3 நாட்களாக 2017-ம் ஆண்டில் அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி திறப்பு குறித்து பேட்டியளித்த காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதையும் சிலர் நம்பி பள்ளி திறப்பு தேதி தள்ளிப்போகிறது என்று சொல்லி வந்தனர்.

இந்த நிலையில் தான் பள்ளிகள் நாளை (திங்கட்கிழமை) திட்டமிட்டபடி திறக்கப்பட இருக்கிறது. அதன்படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.

ஒரு சில மழலையர் பள்ளிகள் மட்டும் திறப்பு தேதியை ஜூன் 7-ந் தேதிக்கு மாற்றி வைத்து இருக்கின்றனர். பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி துறை செய்து வருகிறது.

இதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகளை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், லேப்-டாப் மற்றும் இதர கல்வி உபகரணங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டு இருக்கிறது. அது நிறைவடைந்ததும், அந்த உபகரணங்களும் வழங்கப்படும்.

தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் தங்களுடைய பெற்றோருடன் கடைகளுக்கு சென்று பள்ளிக்கு செல்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கும் பணியில் நேற்று ஆர்வம் காட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com