

சென்னை,
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் காரணமாக அதிகமாக கிடைத்தது. கடந்த 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென்று பல்வேறு கட்சித் தலைவர்கள், கல்வியாளர்களும் கோரிக்கை வைத்தனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்ப நிலை இயல்யை விட 2, 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவானதால் ஒரு சில மாவட்டங்களில் வெப்ப காற்று வீசியது. வெப்பத்தின தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் 3 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு 4 -ந் தேதி அதாவது இன்று (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்படுகின்றன. இதற்கான வளாகப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
முதல் நாளில் மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை விநியோகம் செய்வதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதுதவிர புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பழைய அட்டையைக் கொண்டு மாணவர்கள் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.