

சென்னை,
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஊரடங்கு முடிவிலும் ஒவ்வொரு தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது உள்ள ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை அமலில் இருக்கிறது. இதற்கிடையே பள்ளி, கல்லூரி பல மாதங்களாக மூடப்பட்டு இருந்தன.
இதன் பின்னர் தமிழக அரசு மாணவர்களின் தேர்வை கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து, பெற்றோர்களிடம் கருத்து கேட்டது. இதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்தனர்.
இதன் காரணமாக கடந்த 19-ந் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்பட்டு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஏற்கனவே சுகாதாரத்துறை அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதில் முக்கியமாக பள்ளிகளில் தனிமைப்படுத்தப்பட்ட அறை ஒன்று கட்டாயம் அமைத்திருக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு சந்தேகம் ஏற்படுகிற மாணவர்களை இந்த அறையில் மருத்துவ குழுவினர் வரும் வரை வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதனை அனைத்து பள்ளிகலும் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.