யூடியூப் பார்த்து அறிவியல் பரிசோதனை: தீ விபத்தில் சிக்கிய 6-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

எதிர்பாராதவிதமாக தின்னர் திரவம் கவினின் ஆடையில் சிதறியதால், உடல் முழுவதும் மளமளவெனத் தீப்பற்றியது.
6-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு
10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
Published on: 

திருப்பத்தூர்,

யூடியுப் பார்த்து அறிவியல் பரிசோதனை செய்த 6-ம் வகுப்பு மாணவன் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவன் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பொன்னியம்மன் நகரை சேர்ந்தவர் இளையரசு. இவருடைய மகன் கவின் (வயது 11). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அறிவியல் பரிசோதனை செய்வதில் ஆர்வம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில்,

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவின் தனது மொபைலில் யூடியூப் பார்த்து, அதில் காட்டியபடி ஏதோ ஒரு அறிவியல் பரிசோதனையை செய்ய முயன்றுள்ளார். அதற்காக வீட்டில் பெயிண்ட் அடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 'பெயிண்ட் தின்னர்' திரவத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தின்னர் திரவம் சிறுவனின் ஆடையில் சிதறியதால், உடல் முழுவதும் மளமளவெனத் தீப்பற்றியது. வலியால் துடித்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தந்தை இளையரசு, மகன் மீது எரிந்த தீயை அணைத்துக் காப்பாற்ற போராடினார். இதில் தந்தை இளையரசுவின் கைகளிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட சிறுவன் கவின், 80 சதவீத கடுமையான தீக்காயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த கவின் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். தீயால் காயமடைந்த தந்தை இளையரசு தற்போது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com