பலியான பெண் போலீஸ் பற்றி உருக்கமான தகவல்கள்

பலியான பெண் போலீஸ் பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலியான பெண் போலீஸ் பற்றி உருக்கமான தகவல்கள்
Published on

சென்னை,

சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் கனமழை காரணமாக பழமையான மரம் விழுந்ததில் முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் பிரிவில் ஏட்டாக பணியாற்றி வந்த கவிதா (வயது 45) நேற்று உயிரிழந்தார். மேலும் முருகன் என்ற போலீஸ்காரர் காயம் அடைந்தார்.

மரம் விழுந்த இடத்தில் தினமும் முதல்-அமைசசர் தனிப்பிரிவில் மனு கொடுக்க ஏராளமானோர் வந்து ஒதுங்கி நிற்பார்கள். ஆனால் மழை காரணமாக நேற்று அந்த நேரத்தில் யாரும் வரவில்லை. இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மரம் அகற்றப்பட்டது

இந்த கோர விபத்தில் பெண் போலீஸ் உயிரிழந்த சம்பவத்தை நேரில் கண்ட பெண்கள் பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த சம்பவம், தலைமைச் செயலகத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. மிகுந்த பரபரப்பிற்கு இடையே உயர் அதிகாரிகள் அங்கு வரத்தொடங்கினர்.

தலைமைச்செயலாளர் இறையன்பு விரைந்து வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டார். போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சரிந்து விழுந்த அந்த மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி எடுத்தனர். பிற்பகல் 12.45 மணி அளவில் அந்த மரம் முற்றிலும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. இதற்காக பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமாருக்கு மரக்கிளை விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டது. தலைமைச் செயலக தீயணைப்பு வீரர் ராஜாவுக்கு தலையில் காயமும், தீயணைப்பு வீரர் கோபுவிற்கு தோள்பட்டையில் காயமும் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

3 பிள்ளைகளின் தாய்

இந்த சம்பவத்தில் இறந்த கவிதா போலீஸ் பணியில் 2005-ம் ஆண்டு சேர்ந்தார். அவரது கணவர் சாய்பாபா, கடந்த 2004-ம் ஆண்டு வரை ஒப்பந்த அடிப்படையில் ரெயில்வே ஊழியராக அரக்கோணத்தில் பணியாற்றினார். அவர் தற்போது தண்டையார்பேட்டை பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு அருண்குமார் (22) மற்றும் விஷால் (15) என்ற மகன்களும், ஸ்நேக பிரியா (20) என்ற மகளும் உள்ளனர்.

அருண்குமார், சேலம் மகேந்திரா கேம்பஸ் கல்லூரியில் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். விஷால், சென்னை பாரிமுனையில் உள்ள பிஷப் கேரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்னேக பிரியா மதுரவாயல் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

மரம் விழுந்து தாய் இறந்ததை அறிந்த பிள்ளைகள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com