தொழிலாளி உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு

வத்தலக்குண்டு அருகே 2-வது திருமணம் செய்ததால் தொழிலாளி உள்பட 2 பேரை அரிவாளால் வெட்டிய மகன்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தொழிலாளி உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு
Published on

வத்தலக்குண்டு அருகே உள்ள ஊத்தாங்கல் புதுப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. (வயது 49). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு சற்குண பாண்டி (23), புவனேஷ்குமார் (19) என 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் கொடைரோடு அருகே ஜல்லிபட்டியில் வசித்து, விவசாய கூலிவலை செய்து வந்தனர். பாண்டியின் மனைவி ஜெயா கடந்த சில ஆண்டுகள் முன்பு இறந்து விட்டார். ஜெயாவின் தங்கை பாண்டியம்மாள் (39). அவரது கணவர் முத்தையா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் பாண்டி, பாண்டியம்மாளை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த சற்குண பாண்டியும், அவரது தம்பி புவனேஷ்குமாரும் ஊத்தாங்கல் புதுப்பட்டிக்கு நேற்று முன்தினம் வந்தனர். அங்கு வீட்டில் அவர்களுக்கும், பாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் அரிவாளால் பாண்டியையும், சித்தி பாண்டியம்மாளையும் வெட்டி விட்டு, அங்கு இருந்து தப்பியோடி விட்டனர்.

இதில் படுகாயமடைந்த பாண்டி, பாண்டியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சற்குண பாண்டி, புவனேஷ்குமார் ஆகிய 2 பேரையும் வலைவீசி தடி வருகின்றனர். தந்தையை மகன்களே வெட்டிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com