திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்

பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி கடலில் வழக்கம் போல் புனித நீராடினர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் திரளான பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம், பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை செல்லக்கூடிய வழி என அனைத்து பகுதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதற்கிடையே அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் காலை, மாலை என 2 முறை கடல் உள்வாங்கிய நிலையில், நேற்று காலையிலும் 2-வது நாளாக கடல்நீர் சுமார் 80 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இருப்பினும் பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி கடலில் வழக்கம் போல் புனித நீராடினர். மதியம் கடல்நீர் இயல்பு நிலைக்கு திரும்பியது.






