

திருச்செந்தூர்,
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்பகுதியில் இன்று காலை திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, கடலில் புனித நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களை முன்னிட்டு காலையில் கடல் உள்வாங்கி, மாலையில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவது இயற்கையான நிகழ்வாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று காலை சுமார் 70 அடி தூரம் வரை கடல் நீர் உள்வாங்கியது. இதனால் வழக்கமாக கடலுக்குள் மூழ்கியிருக்கும் பாசி படர்ந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளிப்பட்டன.
இந்த நிகழ்வை பார்த்த பக்தர்கள் அச்சமடைய வேண்டாம் என கோவில் நிர்வாகமும் காவல்துறையும் அறிவுறுத்தியுள்ளன. அதேசமயம், பாறைகள் வெளிப்படுவதால் காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பான பகுதிகளில் மட்டும் நீராடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடற்கரை பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.