கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

நிதியைக் காரணம் காட்டி தி.மு.க. அரசு நீர்த் திட்டங்களை நிறுத்திவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;
"நீரின்றி அமையாது உலகு" என்கிறார் வள்ளுவர். அதாவது எப்படிப்பட்டவருக்கும் நீரில்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்பது இதன் பொருள். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த நீரை, குறிப்பாக கோடைக் காலத்தில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தி.மு.க. அரசுக்கு இருக்கிறது. இந்தக் கடமையை இந்த ஆண்டு கோடைக் காலத்தில் தி.மு.க. அரசு நிறைவேற்றுமா என்பதில் பெருத்த சந்தேகம் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதற்குக் காரணம் எதிலுமே திட்டமிடல் இல்லாமல் தி.மு.க. அரசு செயல்பட்டு வருவதுதான்.
சென்னை மற்றும் அதன் புறநகர்களில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் ஏரிகள் முக்கியப் பங்கினை வகிப்பதைப் போல, கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. மீஞ்சூரில் உள்ள 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் மற்றும் நெம்மேலியில் உள்ள 260 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட இரண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்தப் பணியை சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது.
மேற்படி மூன்று கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களில், மீஞ்சூரில் உள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் கடந்த ஆறு மாதங்களாக செயல்படவில்லை என்றும், நெம்மேலியில் உள்ள இரு திட்டங்களின் செயல்திறன் பாதியாக குறைந்துவிட்டது என்றும், ஒரு நாளைக்கு 260 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட இரண்டு திட்டங்கள் மூலம் 140 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, பற்றாக்குறையை சமாளிக்க ஏரிகளிலிருந்து நீர் எடுப்பதையும், நிலத்தடி நீர் எடுப்பதையும் சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகின்ற நிலையில், கோடைக் காலத்தை நெருங்கும் சமயத்தில் ஏரிகளில் உள்ள தண்ணீரும், நிலத்தடி நீரும் குறையக்கூடிய வாய்ப்பு அதிகமாகும். இந்தத் தருணத்தில், கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்கள் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை என்றால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை உருவாகும்.
தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களின் நிலை இதுவென்றால், கிழக்கு கடற்கரை சாலையில் பேரூர் என்ற இடத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் சென்று கொண்டிருப்பதாகவும், ஐந்து சிறிய திட்டங்கள் வெறும் காகித வடிவில் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. நிதி மேலாண்மைதான் சரியில்லை என்றால், நீர் மேலாண்மையும் சரியில்லை என்ற அவல நிலை.
இது மட்டுமல்லாமல், எதிர்மறை சவ்வூடு பரவுதல் முறை மூலம் நீரை சுத்திகரிப்பு செய்யும்போது, 100 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட கடல் நீரை சுத்திகரிப்பு செய்தால் 42 மில்லியன் லிட்டர் நன்னீர்தான் கிடைக்கின்றது என்றும், இனி வருங்காலங்களில் பல விளைவு வடித்தல் முறையை தமிழ்நாடு அரசு பின்பற்றினால் கூடுதல் நீர் கிடைக்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இவற்றை இந்த ஆண்டு நிறைவேற்றுவது என்பது மிகக் கடினம்.
வருகின்ற கோடைக் காலத்தை சமாளிக்க வேண்டுமென்றால், செயல்படாது இருக்கின்ற மீஞ்சூர் திட்டத்தையும், நெம்மேலியில் உள்ள இரண்டு திட்டங்களையும் முழு செயல்பாட்டுக்கு கொண்டு வர இப்பொழுதே நடவடிக்கைகளை தி.மு.க. அரசு துவக்க வேண்டும். இல்லையெனில் கோடைக் காலத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் தண்ணீருக்கு திண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வரி விதித்தும் நிதி இல்லை, நிதி இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசு, அதே நிதியைக் காரணம் காட்டி நீர்த் திட்டங்களை நிறுத்திவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது.
பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையிலும், நீரின் இன்றியமையாத் தன்மையை உணர்ந்தும், மீஞ்சூரில் உள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், நெம்மேலியில் உள்ள இரண்டு திட்டங்களை முழுத் திறனுடன் செயல்படுத்தவும், நிலுவையில் உள்ள புதிய திட்டங்களை விரைந்து நிறைவேற்றவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






