நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா: மத்திய மந்திரி எல்.முருகன்

நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா: மத்திய மந்திரி எல்.முருகன்
Published on

வர்த்தக வார விழா

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் செப்டம்பர் 20-ந் தேதி முதல் 26-ந் தேதி வரையிலான ஒரு வார காலம் வர்த்தக வார விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் சார்பில், சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் நடந்த வர்த்தக வார விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

விழாவில் மத்திய மீன்வளம், கால்நடைத்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

உள்ளூர் தொழில்கள் ஊக்குவிப்பு

பிரதமர் மோடியின் ஆட்சியில் உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்திய வேளாண் ஏற்றுமதியில் 17 முதல் 18 சதவீதம் வரை கடல்சார் ஏற்றுமதியின் பங்களிப்பு அடங்கியுள்ளது.தமிழகத்தை பொறுத்தவரையில் கால்நடைத்துறையில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தமிழகம் ஏற்றுமதியில் இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் ஏற்றுமதி மேம்பாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்துதரும். ஏற்றுமதியில் தமிழகம் பொருளாதார ஊக்கியாக விளங்குகிறது.

கடல்பாசி பூங்கா

சென்னையில் இருந்து கார் மற்றும் உதிரி பாகங்களும், நாமக்கல் பகுதியில் கால்நடை சார்ந்த பொருட்களும், தூத்துக்குடியில் இருந்து கடல்சார் பொருட்களும் அதிகளவில் ஏற்றுமதி ஆகின்றன. கிராமப்புறங்களில் இருந்துகூட ஏற்றுமதி செய்ய முடியும். இத்தகைய ஏற்றுமதி அதிகரிக்கும் போது கிராம பொருளாதாரம் வளரும். அதன்மூலம் கிராமங்கள் வளர்ச்சி அடைவதோடு வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.மேட் இன் இந்தியா என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆக வேண்டும். கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதனால் மீனவ பெண்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் குழு ஆகியோர் பெரிதும் பயன்பெறுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் வெளிநாட்டு வர்த்தகத்துறை கூடுதல் தலைமை இயக்குனர் எம்.கே.சண்முக சுந்தரம், இணை இயக்குனர் எப்.டி.இனிதா மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com